தக்காளி சாதம்

   தக்காளி சாதம் 

  


தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

 தக்காளி – நான்கு, 
 பெரிய வெங்காயம் – இரண்டு, 
 இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், 
 சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், 
 கடுகு – அரை டீஸ்பூன், 
 உளுந்து – ஒரு டீஸ்பூன், 
 கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
 சீரகம் – அரை டீஸ்பூன், 
 சோம்பு – அரை டீஸ்பூன், 
 பச்சை மிளகாய் – 3, 
 வரமிளகாய் – நான்கு, 
 கருவேப்பிலை – ஒரு கொத்து, 
 மல்லித்தழை – அரை கைப்பிடி, 
 புதினா இலை – அரை கைப்பிடி, 
 உப்பு – தேவையான அளவு, 
 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், 
 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.






STEP 1 :

முதலில் ரெண்டு ஆழாக்கு அரிசியை கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வைத்து நன்கு காய்ந்ததும் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சமையல் எண்ணெயை விடுங்கள். பின்னர் கடுகு போட்டு தாளித்து உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுப்பட்டதும் சீரகம், சோம்பு சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் காரத்திற்கு பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.

STEP 2 :

ரெண்டு நிமிடம் லேசாக வதக்கியதும் மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து, நன்கு பச்சை வாசம் போக வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், வெட்டி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்குங்கள். 

STEP 3 :

இவை மசிய வதங்கிய பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை, அரை கைப்பிடி அளவிற்கு புதினா இலைகளை சேர்த்து வதக்குங்கள். இவை சுருள வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் கடைசியாக அரை கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லியை நறுக்கி தூவிக் கொள்ளுங்கள்.  ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒன்றரை ஆழாக்கு தண்ணீர் சேர்த்தால் போதும்.


STEP 4 :

சாதாரண அரிசி என்றால் ஒரு ஆழாக்கு அரிசிக்கு 2 ஆழாக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து ஊற வைத்துள்ள அரிசியை  சேர்த்து குக்கரை மூடி விடுங்கள். மூன்று விசில் விட்டு எடுத்தால்,  சூப்பரான தக்காளி சாதம் ரெடி! நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க, உங்களுக்கும் இந்த தக்காளி சாதம் ரொம்பவே பிடிக்கும்.

Comments

Popular posts from this blog

சிக்கன் பிரியாணி